May 15, 2012

சிறகினிலே..



விழித்தவுடன் தேடுகிறாள் 
நேற்றிரவு மயில் தோகை 
மூடிவைத்த புத்தகத்தை 
திறந்தவுடன் வியக்கிறாள் 
அது போட்ட மூன்று 
குட்டிகளை பார்த்து  
நான் சொன்னேன்ல 
மயில் குட்டி போடும்னு என்று   
அப்பாவிடம் காட்டுகிறாள் 
இதெல்லாம் சும்மா என்கிறார்   
அவள் தலையை கோதியபடி 
பிறகு அம்மாவிடம் ஓடுகிறாள் 
குட்டிக்கு என்ன சாப்பாடு 
போடனும்மா என்கிறாள் 
நேரம் ஆகுது 
போய் பல் தேய் ஏன்கிறாள்  
வகுப்பில் சக தோழிகளிடம் 
அதிசயம் ஒன்று காட்டபோவதாக 
மயில் குட்டிகளை காட்டுகிறாள் 
இமை மூடாமல் பார்த்த அவர்கள் 
தங்களுக்கும் மயில் குட்டிகள் 
வேண்டும் என கேட்டார்கள் 
தோழிகளுக்காக நான்கு பக்கங்களில் 
மயில் தோகையுடன் 
சிறிது காய்ந்த பூக்களையும் 
சிறிது சீவிய பென்சில் துகள்களையும் 
வைத்துவிட்டு உறங்க செல்கிறாள்   
நாளை அது போடும் குட்டிகளை 
காணும் கனவுடன்

April 06, 2012

உயிரோவியம்




சில்வண்டு 
கூட்டம் ஒன்றால் 
அமைதி கலைந்தது 
ஓவிய கண்காட்சி 
அரங்கின் 
அறை ஒன்றில் 

சுவற்றோர 
எறும்புகள் போல   
ஒருவர் பின் ஒருவர் 
சட்டை பிடித்து 
நகர்கிறார்கள் 
சிறார்கள் 

இதாண்டா கண்ணு 
இல்ல இல்ல.. 
இதாண்டா மூக்குயென
முடிவுக்கு வரும் முன் 
தள்ளப்படுகிறார்கள்
அடுத்த ஓவியத்திற்கு 

அறிவியல் 
புத்தகத்தில் உள்ள 
ஒரு படத்தை போல 
பார்த்து நகர்கிறார் 
ஆசிரியை 
புரிந்துவிட்டதாய்   

உயிரற்ற ஓவியங்கள் 
ரசித்தன 
உயிருள்ள 
சிறு ஓவியங்களை 
சுவற்றில் 
தொங்கியபடி 


April 02, 2012

தாத்தாவின் கை கடிகாரம்




தாத்தாவின் கைபிடித்து 
நடந்த நாள் முதல் 
பரிட்சயம்
ஆகி இருக்கலாம் 
அவருடைய
கை கடிகாரம்

வானொலி செய்தி 
ஆரம்பித்தவுடன் 
நேரம் சரி செய்து 
கீ கொடுக்க
ஆரம்பித்துவிடும் 
அவர் கைகள் தானாய்

அவசரமாய் வெளியூர் 
போகும் நாள் ஒன்றில்
அணிய மறந்து
அன்றைய பிரச்சனைக்கு 
அதுவே காரணம்
என்று  புலம்புவார்

விசை உள்ளவரை
ஓடும் கடிகாரம் போல 
உயிர் உள்ளவரை
ஓட வேண்டும்
மனிதன் 
என்பார்

மருத்துவர் கை
விரித்த நாள் ஒன்றில்
கீ கொடுக்க ஆள்
இன்றி ஒரே இடத்தில் 
துடித்து கொண்டு இருந்தது
நொடி முள்

இன்று 
புழுதி படிந்த 
பெட்டி ஒன்றில்
விசை இழந்து
சலனமற்று கிடக்கிறது
அவரை போலவே 

March 15, 2012

ஞாயிறு பயணம்



அம்மாவின் பிடிசோறும்  புளி ரசமும் 
அப்பாவுடனான ஸ்கூட்டர் பயணம்
கைகடிகாரம் கடன் கேட்ட கடைசி தம்பி 
தாடியை எடுக்க சொன்ன தங்கை 

நண்பர்களுடன் பார்த்த திரைப்படம் 
மின்வெட்டு நேரத்து உரையாடல்கள் 
அசலை தாண்டிய வட்டிகள்  
நாளைய நிலுவை வேலைகள் 

இவையனைத்தும் 
நினைவில் வந்து போகும் 
வேலைக்கு திரும்பும்
பேருந்து பயணம் ஒன்றில் 

காதில் இசையை அடைத்து
மனதை கலைக்கும் முயற்சியில்
உறங்கி ஜெயிக்கின்றேன் 
ஒவ்வொரு பயணத்திலும்


இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails