April 06, 2012

உயிரோவியம்




சில்வண்டு 
கூட்டம் ஒன்றால் 
அமைதி கலைந்தது 
ஓவிய கண்காட்சி 
அரங்கின் 
அறை ஒன்றில் 

சுவற்றோர 
எறும்புகள் போல   
ஒருவர் பின் ஒருவர் 
சட்டை பிடித்து 
நகர்கிறார்கள் 
சிறார்கள் 

இதாண்டா கண்ணு 
இல்ல இல்ல.. 
இதாண்டா மூக்குயென
முடிவுக்கு வரும் முன் 
தள்ளப்படுகிறார்கள்
அடுத்த ஓவியத்திற்கு 

அறிவியல் 
புத்தகத்தில் உள்ள 
ஒரு படத்தை போல 
பார்த்து நகர்கிறார் 
ஆசிரியை 
புரிந்துவிட்டதாய்   

உயிரற்ற ஓவியங்கள் 
ரசித்தன 
உயிருள்ள 
சிறு ஓவியங்களை 
சுவற்றில் 
தொங்கியபடி 


April 02, 2012

தாத்தாவின் கை கடிகாரம்




தாத்தாவின் கைபிடித்து 
நடந்த நாள் முதல் 
பரிட்சயம்
ஆகி இருக்கலாம் 
அவருடைய
கை கடிகாரம்

வானொலி செய்தி 
ஆரம்பித்தவுடன் 
நேரம் சரி செய்து 
கீ கொடுக்க
ஆரம்பித்துவிடும் 
அவர் கைகள் தானாய்

அவசரமாய் வெளியூர் 
போகும் நாள் ஒன்றில்
அணிய மறந்து
அன்றைய பிரச்சனைக்கு 
அதுவே காரணம்
என்று  புலம்புவார்

விசை உள்ளவரை
ஓடும் கடிகாரம் போல 
உயிர் உள்ளவரை
ஓட வேண்டும்
மனிதன் 
என்பார்

மருத்துவர் கை
விரித்த நாள் ஒன்றில்
கீ கொடுக்க ஆள்
இன்றி ஒரே இடத்தில் 
துடித்து கொண்டு இருந்தது
நொடி முள்

இன்று 
புழுதி படிந்த 
பெட்டி ஒன்றில்
விசை இழந்து
சலனமற்று கிடக்கிறது
அவரை போலவே 

இதையும் பார்க்கலாமே...

Related Posts with Thumbnails